தமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பின் சார்பில் திருநெல்வேலியில் நடைபெற்ற சிறப்பு விழாவில், கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரம், தொழில் முனைவோர் திறன் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக தொடர்ந்து செயல்பட்டு வரும் “தவப்புதல்வி – கிராமப்புற பெண்கள் மேம்பாட்டு அமைப்பு” சிறப்பான சமூகப் பணிக்காக பாராட்டப்பட்டு, அதன் நிறுவனர் பேராசிரியர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை அவர்களுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் சிறப்புரையாற்றி, விருது வழங்கும் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார்.

விழாவில் வழங்கப்பட்ட விருதுகளை தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் திரு. மரியா ஜான் அவர்கள் வழங்கினார். அவரிடமிருந்து “தவப்புதல்வி – கிராமப்புற பெண்கள் மேம்பாட்டு அமைப்பு” சார்பில் அதன் நிறுவனர் பேராசிரியர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை விருதைப் பெற்றுக்கொண்டார்.

தவப்புதல்வி அமைப்பின் மூலம் கிராமப்புற பெண்களின் திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு தொழில் பயிற்சி, சுயதொழில் வாய்ப்புகள், தயாரிப்பு மேம்பாடு, சந்தைப்படுத்தல் மற்றும் பொருளாதார தன்னிறைவு பெறுவதற்கான பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கிராமப்புற பெண்களின் உழைப்பையும் திறமையையும் பொருளாதார வாய்ப்புகளாக மாற்றி, அவர்களை தன்னம்பிக்கையுடன் தொழில் முனைவோராக உருவாக்கும் நோக்கில் தவப்புதல்வி – கிராமப்புற பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இந்தப் பணிகளைப் பாராட்டி வழங்கப்பட்ட இவ்விருது, கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக தவப்புதல்வி மேற்கொண்டு வரும் பணிக்குக் கிடைத்துள்ள முக்கியமான அங்கீகாரமாக அமைந்துள்ளது.

விருதைப் பெற்றுக்கொண்ட பேராசிரியர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை, இந்த அங்கீகாரம் தமக்கான தனிப்பட்ட பாராட்டாக மட்டுமல்லாமல், கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக உழைத்து வரும் அனைத்து பெண்களுக்கும் கிடைத்த அங்கீகாரம் என்றும், பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான தவப்புதல்வியின் பயணம் தொடர்ந்து விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.