சென்னை சேப்பாக்கம் சிவானந்த சாலையில் இயங்கி வரும் மத்திய அரசின் செய்தி ஒலிபரப்புத் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பத்திாிகை தகவல் அலுவலக (PIB) வளாகத்திற்குள், நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகளின் பதிவுகளை நிர்வகிக்கும் 'RNI' (Registrar of Newspapers for India) அலுவலகப் பிரிவு செயல்பட்டு வருகிறது. பத்திரிகையாளர்களின் வாழ்வாதாரப் பதிவுகளுக்கு வழிகாட்டும் இந்த முக்கியமான பிரிவில், தகவல்களைக் கேட்டு வரும் பத்திரிகையாளர்களிடம் காட்டப்படும் அலட்சியமும் திமிரும் எல்லை மீறிப்போய்க் கொண்டிருக்கின்றன. அங்கிருக்கும் சிறப்பு அறையில் மூன்று நபர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்; ஆனால் அவர்கள் நிரந்தர அரசு ஊழியர்களா, தற்காலிகப் பணியாளர்களா அல்லது ஒப்பந்த அடிப்படையில் வந்தவர்களா என்பது யாருக்கும் தெரியாத இரகசியமாகவே நீடிக்கிறது. தகவல் பலகையில் அலுவலக நேரம் 'காலை 11.00 முதல் மாலை 5.00 மணி வரை' என்று பட்டவர்த்தனமாகப் போட்டு வைத்திருந்தாலும், அங்குப் பணிபுரியும் நபர் எத்தனை மணிக்கு வருவார், எத்தனை மணி வரை நாற்காலியில் அமர்ந்திருப்பார் என்பதை அந்த ஆண்டவனாலும் கணிக்க முடியாது. ஒருவர் விடுமுறையில் சென்றால் கூட, அது அன்றைய நாள் காலை 10 மணிக்குத் தெரியாது; மறுநாள் தான் அங்குள்ளவர்களுக்கே தெரியவரும் கூத்து அரங்கேறுகிறது.
வெப்சைட்டில் விவரங்கள் தெளிவாக இல்லாததால் தான் பத்திரிகையாளர்கள் நேரில் சென்று விளக்கம் கேட்கிறார்கள் என்ற குறைந்தபட்ச புரிதல் கூட இல்லாமல், "எதுவா இருந்தாலும் RNI வெப்சைட்டைப் பார்த்துத் தெரிஞ்சுக்கோங்க!" என்று தட்டிக்கழிப்பதும் திமிராகப் பதிலளிப்பதுமே அங்குள்ள சிலரின் தினசரி வழக்கமாக உள்ளது. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக நின்று மக்களுக்காகக் குரல் கொடுக்கும் பத்திரிகையாளர்களிடமே இந்தத் துறை ஊழியர்கள் இப்படித் தலக்கனத்தோடு நடந்துகொள்ள யார் அனுமதி கொடுத்தது? அலுவலக இயங்கு நேரம் 10.00 (அல்லது 11.00) முதல் 5.00 மணி என்றால், அந்த நேரத்தில் உரிய முறையில் பதிலளிக்கக் குறைந்தபட்சம் ஒரு பொறுப்பான நபரையாவது இருக்கையில் அமர வைக்கக்கூட மத்திய செய்தி ஒலிபரப்புத் துறைக்கு வழியில்லையா? சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, கடமை தவறி நடக்கும் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், பத்திரிகையாளர்களின் சந்தேகங்களுக்குப் பணிவோடு தெளிவான தகவல்களைச் சொல்லக்கூடிய தகுதியான ஊழியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்பதே ஊடக உலகத்தினரின் நியாயமான கோரிக்கையாகும்!


