“பள்ளி வளாகத்திலேயே பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை”

சென்னை,

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

சிங்கப்பெண் படை எங்கே? பெண்கள் பாதுகாப்பில் அண்ணனா இருப்பேன், அரணா இருப்பேன் என்று வாய்கிழிய வசனம் பேசிய முதல்-அமைச்சர் எங்கே?

சென்னை வண்டலூர் அருகே அரசுப் பள்ளி மாணவி ஒருவர் மர்ம நபர்களால் பட்டப்பகலில் பள்ளி வளாகத்தில் இருந்தே கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் பாதுகாப்பில் எந்தச் சமரசமும் இல்லை என்று சொல்லிக்கொள்ளும் அரசின் ஆட்சியில், அரசுப் பள்ளி வளாகத்திலேயே பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லாதது வெட்கக்கேடு என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தை மூடி மறைக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக முதல்-அமைச்சர் வருகிறார் என்று கூறி, இந்த சம்பவத்தை காவல்துறையும் அதிகாரிகளும் மூடி மறைக்க முயற்சிப்பதாகவும், பாம்புக்கடி என்று மடைமாற்றுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். குற்றவாளிகளைப் பிடிப்பதற்கு பதிலாக, பாதிக்கப்பட்ட பெற்றோரின் செல்போன்களை கைப்பற்றி, இந்த சம்பவம் குறித்து பொது வெளியில் பேசக்கூடாது என போலீஸ் தரப்பில் மிரட்டல் விடுப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆட்சியாளர்களின் அராஜகப் போக்கு குற்றவாளிகளுக்கு கூடுதல் தைரியத்தை அளிப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களை மேலும் சித்திரவதை செய்வது போல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய சிகிச்சை அளிப்பதுடன், அவருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அரசுப் பள்ளி உட்பட அனைத்து பள்ளி வளாகங்களிலும் பிள்ளைகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். இடைத்தேர்தல் வருகிறது என்று இந்த கொடுமையை மூடி மறைக்க முயற்சித்தால், மக்கள் இந்த ஆட்சியாளர்கள் முகத்தில் கரியை பூசுவது உறுதி என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.